
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிப்பிட முடியாத, காலத்தால் பழமையான பொருட்கள், மூன்று அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பே, 90 ஆயிரம் கோடி ரூபாய். இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், கோவில் வசமே இருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பொக்கிஷத்தை எப்படிஇனி பாதுகாப்பது என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
பத்மநாப சுவாமி கோவில், தற்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்திடம் உள்ளது. கோவில் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டி.பி.சுந்தரராஜன் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கின் எதிரொலியாக, கோவிலின் ஆறு பாதாள அறைகளை திறந்து பரிசோதிக்கும்படி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான இக்குழு, கடந்த 27ம் தேதி, அறைகளை திறக்கத் துவங்கியது.இதுவரை மூன்று அறைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி, திறக்கப்பட்ட அறையில் இருந்த பொருட்களின் பட்டியல், 2ம் தேதி தயாரானது. இன்னும் முழுமையான அளவில் பொக்கிஷம் குறித்த கணக்கெடுப்பு முடியவில்லை.
பொக்கிஷம்திறக்கப்பட்ட மூன்று அறைகளில் உள்ளவற்றின் மதிப்பு மட்டுமே இன்றைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.அறைகள் திறக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த குழுத் தலைவர் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையில் இப்பணி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.
மன்னர் குடும்பத்து எளிமை : இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
பாதுகாப்பு எவ்வாறு?பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் கைகளுக்கு வந்த பல்வேறு கோவில்களில் இருந்த அளப்பரிய செல்வங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கே சென்றதும், அதன் பின் அவை பற்றிய தகவல்களே கிடைக்காததும், அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையும் தான் அறிஞர்களின் கவலைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
இதுகுறித்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தச் செல்வங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கக் கூடாது. இவை அனைத்தும் பழைய நிர்வாக முறைப்படி திருவிதாங்கூர் அரச குடும்பத்தாலேயே கோவிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுகளால் எடுக்கப்பட்ட கோவில்களில் இருந்த செல்வங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும், மோசடி செய்யப்பட்டதும் நாம் அறிவோம். அது போன்ற சம்பவங்கள் இந்தக் கோவிலில் நடக்கக் கூடாது.கோவிலிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதில் சில முக்கியமான பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்து விட்டு, மற்றவற்றை ரகசிய அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.
வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜி.சசிபூஷண், "வருங்கால தலைமுறைக்கும் இவை பற்றிய தகவல்கள் சேர வேண்டுமானால் இவை அனைத்தும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.
அதேபோல், வி.எச்.பி., நாயர் சர்வீஸ் சொசைட்டி, நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மத்திய அல்லது மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இவற்றை கோவில் சொத்துகள் என அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.இதனிடையே, நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்று, மன்னர் வாரிசான உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேற்று தெரிவித்தார்.
மக்களை ஈர்க்கும் கோவில்:* கி.பி., 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் இக்கோவிலைப் பாடியுள்ளார்.
*தமிழகம் மற்றும் கேரள கட்டடக் கலைகள் இணைந்த கோவில் இது.
*கி.பி., 1686ல் இக்கோவில் முழுவதும் தீக்கிரையானதால், அப்போதைய மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் புதுப்பிக்கப்பட்டது.
*மரத்தால் ஆன மூலவர் விக்ரகம் தீயில் சேதம் அடைந்ததால், 12 ஆயிரம் சாளக்கிராமக் கற்கள் மற்றும் கடுசர்க்கரையால் மூலவர் புதிதாக உருவாக்கப்பட்டார்.
*திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திற்கு தலைவர் பத்மநாப சுவாமி தான் என்பதால் அவருக்கு, பிரிட்டிஷ் ஆட்சியில், 21 குண்டுகள் முழக்கி மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு வரும் வரை இந்த மரியாதை நீடித்தது.
*பிரிட்டிஷ் ஆட்சியில், அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள், "ராஜப்ரமுக்' (கவர்னர்) என்று பட்டம் சூட்டப்பட்ட போதும் கூட, அவர் கோவில் சொத்துகளை முறையாகவே பராமரித்து வந்தார்.
*நீண்ட காலமாக மன்னர்கள், மக்களுக்கு விதிக்கும் அபராதம் இக்கோவிலில் தங்க ஆபரணங்களாகச் சேர்க்கப்படுவது வழக்கம். கோவில் பொருளை எவரும் திருட முற்பட்டதில்லை என்பதும் இங்கேயுள்ள தனிச்சிறப்பாகும்.
திருவனந்தபுரம்: திருப்பதி ஏழுமலையானை சொத்து மதிப்பில் மிஞ்சிய பத்மநாபர் கோயிலுக்கு லட்சம் கோடிகளை தாண்டும் இந்த பொக்கிஷங்கள் குவிந்தது எப்படி என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒருங்கிணைந்த இந்தியாவில் குறுநில மன்னர் சமஸ்தானங்கள் சேர்க்கப்பட்டபோது, 1949 ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானமும் சேர்க்கப்பட்டது. தெற்கில் கன்னியாகுமரி, வடக்கே எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை நீண்டிருந்தது. தமிழ்நாட்டின் பத்மநாபபுரம் தான் அப்போது அதன் தலைநகராக இருந்தது. பின்னர் தான், திருவனந்தபுரமாக மாற்றப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தான முதல் மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. அவருக்கு பின் கார்த்திகை திருநாள் ராம வர்மா ஆட்சி செய்தார். அப்போது தான் திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாறியது.
1750 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரம்பித்தபோதே, அரசாட்சியும், பத்மநாபர் கோயிலும் இணைந்தே இருந்தது. முதல் மன்னர், என் சொத்துக்கள் எல்லாம் பத்மநாபருடையது. நான் அவருடைய சேவகன்’ என்று அறிவித்து தன் பெயரை பத்மநாப தாசர் என்றும் மாற்றிக்கொண்டவர். கடந்த 1813 ல் இருந்து 1846 வரை ஆண்ட, சுவாதித்திருநாள், பிரபலமான கர்நாட இசை கலைஞராக இருந்தவர். ஆங்கில மொழி பற்று கொண்டவர். 1921 1992 ல் வாழ்ந்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா தான் இந்தியாவில் மரண தண்டனையை ஒழித்த முதல் சமஸ்தான மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1936ல், திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யர் யோசனைப்படி, தீண்டாமையை ஒழித்து, கோயிலுக்குள் எல்லாரும் போய் தரிசிக்க வைத்தவரும் இவர் தான்.
பத்மநாபர் கோயிலுக்கு தங்கள் சொத்துக்களை அப்படியே தந்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் என்பதை பல மலையாள இலக்கியங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் குறித்து, 1941 ல் கவிஞர் பரமேஸ்வர அய்யர் தன் பிரதானபட்டா மதிளகோம் பதிவேடுகள் என்ற புத்தகத்தில் குறிப்புகளை எழுதியுள்ளார். இதுபோல, கொட்டாரம் (அரண்மனை) மானுவல் 12 பகுதிகள் அடங்கியது. அவற்றில், பொக்கிஷங்கள் குறித்து குறிப்புகள் உள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். திருவிதாங்கூர் பரம்பரையில் முதல் மன்னர் முதல் கடைசி மன்னர் மட்டுமல்ல, இப்போதுள்ள வாரிசுகள் வரை, சொத்துக்கள் பற்றி கணக்கில் தெளிவாக இருந்துள்ளனர். கோயிலுக்கு தந்தபின், சொத்துக்களை கட்டிக்காத்து வந்துள்ளனரே தவிர, அவற்றில் இருந்து செலவு செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்மநாபர் கோயிலுக்கு எல்லா சொத்துக்களையும், தங்க, வெள்ளி நகைகள், பொருட்களை தந்தபின், அவற்றை பாதுகாத்து வந்த சமஸ்தான மன்னர்கள், கோயில் நிர்வாக செலவுக்கு , ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட நறுமணப்பொருட்கள் விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து தான் எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. திருவிதாங்கூர் பரம்பரை குடும்பத்தின் தலைவராக இப்போது இருப்பவர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. இதுவரை இருந்த அரச பரம்பரை மன்னர்களை போலவே, அவரும் எளிமையானவர். கோயில் விஷயத்தில் தலையீடு செய்ததில்லை. கோயிலில் லட்சம் கோடிகளை தாண்டி, பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் மவுனம் கலைப்பதை தான் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
மண்ணைகூட தட்டியவர்கள்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர்கள், பத்மநாபர் கோயிலுக்கு ஒரு நாள் கூட வராமல் இருந்ததில்லை. கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வெளியேறும் போது, கோபுர வாசலில், கால்களில் இருந்த மண்ணை தட்டி விட்டு செல்வர். மண்ணை கூட எடுத்துசெல்லாதவர்கள் என்பதை இப்படி நிரூபித்துள்ளனர்.
கண்தான் பேசும்
இப்போது பொக்கிஷங்கள் கணக்கெடுப்பு குறித்து உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கூறியது என்ன தெரியுமா? ‘கடைசி பைசா எண்ணி முடிக்கும் வரை, என் கண்கள் தான் பேசும்’
ரூ.151.55 கட்ட வேண்டும்
பத்மநாபர் கோயிலுக்கு சமஸ்தானத்தை சேர்ந்த தலைவர் தினமும் வர வேண்டும் என்பது காலம் காலமாக எழுதப்பட்ட அரச விதி. இதை இன்று வரை யாரும் மீறியதில்லை. அப்படி ஒரு நாள் வராமல் இருந்தால், ரூ.151.55 அபராதமாக கோயிலில் கட்ட வேண்டும்.
பக்கிங்ஹாமுக்கு மிளகு ஏற்றுமதி
மூலம் திருநாள் ராம வர்மா; இவர் தான் அடுத்த அரச பரம்பரை வாரிசு தலைவர். ஆஸ்பின்வால் கம்பெனி என்ற நறுமணப்பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். ஏலக்காய், லவங்கம், கிராம்பு, மிளகு போன்ற நறுமணப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். பிரிட்டீஷ் ராணி எலிசபெத் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இப்போதும் மிளகு ஏற்றுமதி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment